தூத்துகுடியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடபாக காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலம் அருகே, கையில் பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் இருந்ததால், போலீசார் அவர்களை விசாரித்தனர். மேலும், அவர்களின் உடைமைகளை சோதனையிட்ட போலீசார், அதில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை அறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்தது.

மேலும் பழைய நோட்டுக்களை புதிய நோட்டாக மாற்றும் முயற்சியில் இந்த பணத்தைக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடரந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.