Police Decision to Investigate atm gang Leader - want to find 24 Lakhs
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் ஏ.டி.எம். கொள்ளையில் பறிபோன ரூ.24 இலட்சத்தை மீட்க ஏ.டி.எம்.கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவலாளார்கள் முடிவு எடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள இரண்டு ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி ரூ.30 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய எட்டு பேரை காவலாளர்கள் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அந்த கும்பலின் தலைவன் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமுதீன் (43) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், இஸ்லாமுதீனை தனிப்படை காவலாளர்கள் கோயம்புத்தூருக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர், இஸ்லாமுதீனை காவலாளர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ஏ.டி.எம்.கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவலாளார்கள் முடிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் ஏ.டி.எம்.களை உடைத்துக் கொள்ளையடித்த பணத்தில் இதுவரை ரூ.6 இலட்சம்தான் கைப்பற்றப்பட்டு உள்ளது. மீதி ரூ.24 லட்சம் குறித்த தகவல்கள் இஸ்லாமுதீனுக்குதான் தெரியும் என்பதால் அது பற்றி விசாரித்து மீட்க வேண்டியது உள்ளது.
இஸ்லாமுதீன் கும்பலில் உள்ள மற்ற கொள்ளையர்களின் உதவியுடன் தமிழகத்தில் வேறு எங்கும் கைவரிசை காட்டி இருக்கிறார்களா? இஸ்லாமுதீனுக்கு தமிழகத்தில் உதவி செய்தவர்கள் யார்? உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் இஸ்லாமுதீனிடம் தான் இருக்கிறது.
எனவே, இஸ்லாமுதீனை காவலில் எடுத்து விசாரித்தால்தான் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியவரும் என்பதால் இந்த வாரத்தில் அதற்கான மனுவை காவலாளர்கள் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
