police decided fix cctv cameras in madhurai to prevent thefts
மதுரை
மதுரை நகரில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றின் வெளிப் பகுதிகளிலும், வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் அவர், "நாளுக்கு நாள் மதுரை மாநகரின் எல்லை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்றார்போல காவல் துறையும் மாறவேண்டி உள்ளது.
மாநகரத்தில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இருக்கும் போலீஸை வைத்துதான் பாதுகாப்பு, குற்ற தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மதுரை மாநகரில் சுமார் 900 தெருக்கள் உள்ளன. இவற்றில் 2 அல்லது 3 தெருக்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டு ரோந்துப் பணி மேற்கொண்டாலே குற்றங்கள் குறையும்.
மேலும், மதுரை நகரில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றின் வெளிப் பகுதிகளிலும், வீடுகளில் திருட்டு போவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
![]()
கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து கிடைக்கின்றன. எனவே, திருட்டு நடந்தபிறகு புகார் தருவதைவிட, வரும் முன் காப்பது நல்லது என்னும் பட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி திருட்டை தடுக்கலாம்.
நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை அதிகம் நடக்கும் பகுதிகளில் காவலாளர்கள் தொடர் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காவலாளர்கள் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

தல்லாகுளம், கூடல்புதூர், அண்ணாநகர் போன்ற காவல் நிலையங்கள் பெரும் பரப்பளவை கொண்டுள்ளதால் இந்தப் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை அமைக்கவும், கூடுதல் காவலாளர்கள் நியமிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாநகரின் சாலைகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதனை இயக்கமாக கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், திருட்டைத் தடுக்க குற்றத் தடுப்பு தனிப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
