கோவை,
தீ விபத்து என்று கூறி காவல்துறையினரையும், தீயணைப்பு படையினரையும் ஏமாற்றிய விஷமியை கைது செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தீப்பிடித்து எரிகிறது. தீயணைப்பு வண்டியை உடனே அனுப்புங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
பதறிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 100 அடி சாலை மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால் உடனே காவல்துறையினரும் அங்கு விரைந்தனர்.
ஆனால் அவர்கள் அங்கு சென்றதும் தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்த போது அந்த தகவல் புரளி என்று தெரியவந்தது.
இதேபோல வியாழக்கிழமை அன்று கோவை சாய்பாபா காலனியில் தீ விபத்து என்று கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுபற்றி விசாரித்ததில் அதுவும் போலியான அழைப்பு என்று தெரியவந்தது.
எனவே கோவையில் கடந்த இரண்டு நாள்களாக யாரோ வில்லங்கம் பிடித்தவர் தீவிபத்து என்று புரளி கிளப்பி விட்டது விசாரணையில் தெரியவந்தது. கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை பேசிய ஆசாமி செல்போனில் இருந்து பேசியது தெரிய வந்துள்ளது.
அந்த செல்போன் எண்ணை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நெருக்கடியான நேரங்களில் காவல்துறையினரையும், தீயணைப்பு படையினரையும் வேண்டுமென்றே அலைக்கழிக்கும் நோக்கத்தில் புரளி கிளப்பி விடும் மர்ம நபரகளை கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றார்.
