புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் காரை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

புதுச்சேரியில் 2015 ஆம் ஆண்டு 2,642 பேரை பொதுப்பணித்துறையில் அரசு பணி நியமனம் செய்தது. அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களை தேர்தல் துறை நீக்கியது. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.10,000 சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் இதுவரை அரசு அவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்நிலையில் தங்களுக்கு சட்டப்பேரவையில் அறிவித்தப்படி மீண்டும் பணி வழங்க வேண்டும் என 50 க்கும் மேற்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் திடீரென தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி அப்பகுதியில் வந்த போது அவரது காரை வழி மறிக்க முயற்சித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் பேச்சுவார்த்தை முற்றி லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திடீரென போலீசார் போராட்டக்காரர்களை களைய தடியடி நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர் கீழே விழுந்தது நிலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,பெண்கள் மற்றும் ஆண்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.