காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரம் அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்த போகச் சொன்ன  தலைமைக் காவலர் பாட்டிலால் தாக்கப்பட்டும் , கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மோகன்ராஜ்.   இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வேலைலைக்கு சென்று கொண்டிருந்தார்.  போகும் வழியில் அரசுப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியின் கட்டிடத்தில் அமர்ந்து சிலர்  மது அருந்தியுள்ளனர்.இதைப்பார்த்த மோகன்ராஜ் அவர்களிடம் சென்று, ‘பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இது போன்று நடக்கலாமா?’ என்று கேட்டு கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார்.

ஆனால் அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கும்பல், ‘நீ யாரு எங்களைக் கேட்க? போலீஸாக இருந்தால் பயந்துவிடுவோமா?’ என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென தங்கள் கையிலிருந்த மது பாட்டிலால் மோகன்ராஜ் தலையில் அடித்தனர்..

ரத்த வெள்ளத்தில் மோகன்ராஜ் நிலைகுலைந்து  கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தலையில் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து அவர் தப்பிக்க முயல போதை வெறியில் இருந்த அந்த கும்பல் பாட்டிலை உடைத்து மோகன்ராஜ் வயிற்றில் குத்திவிட்டு ஓடியது.இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மோகன் ராஜ் உயிரிழந்தார்.

காலையில் அப்பகுதி வழியே சென்றவர்கள் போலீஸ் உடையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சமபவ இடத்திற்கு டிஐஜி தேன்மொழி, எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

காவலர் மோகன்ராiஜை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொலைக்கும்பலை தேடி வருகின்றனர்