சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக போராடி வரும் இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்ைகக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு நிரந்தரச் சட்டம் தேவை என்று கூறி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவசரச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லக்கோரி போலீசார் கூறினர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவாகி, வன்முறை வெடித்தது. இதனால், போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்டக்காரர்களை கலைத்தனர்.
போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்தனர். இதனால், சென்னையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடற்கரையை ஒட்டியுள்ள மீனவப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்ட களத்தில் குதித்து, வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், மெரினா கடற்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பதற்றம் ஏற்பட்டது. .
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஜார்ஜ்வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பு மனு ஒன்றினை தாக்குதல் செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், “ மாநில அரசின் நிர்வாக விஷயங்களில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதில் நாங்கள் தலையிட முடியாது'' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
