சேலம்
 
பசுமை வழிச் சாலை பற்ரி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய ஈரோட்டை சேர்ந்த இளைஞரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலை அமைய உள்ள இடங்களில் நில அளவீடு செய்யும் பணி தொடங்கி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், "அதிகாரிகள் நில அளவீடு செய்யும்போது பணியை தடுத்ததால் ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவரை காவலாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர்" என்று முகநூலில் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி ஒன்று பரவியது. 

இதுகுறித்து சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், சேலம் மல்லூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து இந்த செய்தியை பரப்பியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை பரப்பியதாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் (43) என்பவரை காவலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடிவந்த காவலாளர்கள், ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல்  (27) என்பவரையும் நேற்று கைது செய்தனர். 

"நில அளவீடு செய்யும் பணியை தடுத்ததால் விவசாயியை காவலாளர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர்" என்ற செய்தி பொய்யானது. பொய்யான செய்தியை மக்களிடையே பரப்பியதால்தான் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.