சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் பரவியதால், அங்கு பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது. ஆனால் பின்னர் அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதனையடுத்து  மெரீனாவில் அனுமதியின்றிப் போராட்டம், பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதுபோலவும், அவர்கள் மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டத்துக்கு அழைப்பதுபோலவும் விடியோ காட்சி முகநூலில் நேற்று  பரவியது.

இதனால், மெரீனாவை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வருவதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து  மெரீனாவில் நேற்று காலை முதல்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சுமார் 500 போலீஸார் குவிக்கப்பட்டனர். மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இளைஞர்களும், மாணவர்களும் மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஊடகங்களில் இன்றும் தகவல் பரவியது. இதையடுத்து இன்று இன்னும் அங்கு கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவுக்கு போராட்டம் நடத்துவதற்காக வந்த 25 க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்துப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.