Asianet News TamilAsianet News Tamil

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் 150 பேரை கைது செய்தது காவல்துறை...

Police arrested 150 people for fighting against ONGC
Police arrested 150 people for fighting against ONGC
Author
First Published Feb 12, 2018, 10:37 AM IST


திருவாரூர்

திருவாரூரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கடம்பக்குடியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பணிகளால் நிலத்தடிநீர், விளைநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். இவர்களின் கடும் எதிர்ப்பால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்தப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், அதே இடத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை தொடங்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, எண்ணெய் எடுக்கும் பணிகள் மும்முரமாக  நடைபெற்றன.

இதற்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த மூன்று பேர் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல, இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

மேலும், கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், "ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களிலிருந்து வெளியேற வேண்டும்" என்றும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 60 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை வலுகட்டாயமாக கைது செய்தது.

அவர்கள் அனைவரையும் மாலை வரை சிறைப்பிடித்து வைத்திருந்து பின்னர் விடுவித்தனர். எத்தனைமுறை கைது செய்தாலும், விளைநிலத்தை பாழாக்கும் ஒஎன்ஜிசி நிறுவனத்தை அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios