கோவையில் 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுமி, டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 7 மாணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 12ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு டேட்டிங் ஆப் மூலம் இரண்டு கல்லூரி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியதை அடுத்து செல்போன் எண்களை பகிர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு நைசாக பேசி அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்க்ஷித் (19), அபினேஷ்வரன் (20), தீபக் (20), யாதவராஜ் (19), முத்து நாகராஜ் (19), நிதீஷ் (20) ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பெண்களைப் பாதுக்காக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் சட்டங்களை கடுமையாக்கியுள்ளார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிற விவகாரத்தில் குற்றத்தோடு தொடர்புடைய 7 மாணவர்கள் உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனையை திராவிட மாடல் அரசு பெற்றுத்தரும். பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பெண்களைப் பாதுக்காக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் சட்டங்களை கடுமையாக்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் காரணமாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையாலும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கான திராவிட மாடல் அரசு எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் அறிவார்கள். 

பெண்களைப் படிக்கவிடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் சிறுபுத்தியோடு பழனிசாமி முன்னெடுத்த விஷமப் பிரச்சாரம் திராவிட மாடல் அரசின் துரித நடவடிக்கைகளால் பிசுபிசுத்துபோனது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் தமிழ்நாடு அரசை உயர்நீதி மன்றமே பாராட்டியுள்ளது.

பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதலமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதலமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல். அதை உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல் படுங்கள் பழனிசாமி. பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.