தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. பீகாருக்கு முன்பே கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளையும் பீகார் அரசு தான் வெளியிட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பது தெரியவந்துள்ளது.
பீகார் அரசின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதனடிப்படையில், நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளம் அமைத்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாராட்டுகள். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்கு வழிகாட்டும். சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது பிகார் மாநில அரசு. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் வழிகாட்டியிருக்கிறார் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதற்காக அவருக்கு எனது பாராட்டுகள்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அடித்தளம் மட்டும் தான். அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது தான் இந்த சமூகநீதிப் பயணம் அதன் இலக்கை எட்டும். அதற்கான நடவடிக்கைகளை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிகாரில் ஏற்றப்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சமூகநீதி ஒளி வழங்குவதில் ஆர்வமுள்ள அனைத்து மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகி விட்ட கொலை: அண்ணாமலை கடும் கண்டனம்!
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில், மத்திய அரசும் அதை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என பீகார் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை தன்னிச்சையாக நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது