திருநெல்வேலி

வனப்பகுதி, நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டினால் அதனை திறக்க வரும் பிரதமர் மோடி தமிழக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை என்று நல்லக்கண்ணு தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், மூத்தத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு, திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு வந்தார்.

அங்குள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருடன் மாநில மாணவரணி செயலாளர் தினேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தை சேர்ந்த சுகுமார், ஆசிரியர் கோமதிநாயகம், லெனின் மற்றும் பலர் இருந்தனர்.

அப்போது அவர், “நீட் விவகாரத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் கடந்த 14–ஆம் தேதி தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய ஒரு வாரத்திற்குள், அதே வழக்கறிஞர் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று முரண்பட்ட தகவலை தெரிவிக்கிறார்.

நீட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது. தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்து விட்டது.

பத்தொன்பது எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்துள்ளனர். எனவே ஆளுநர் தமிழக சட்டசபை கூட்டத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பகிரங்கமாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் தமிழக அரசை கலைக்க வேண்டும்.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இடத்தையும், நீர்நிலைகள் ஓடும் இடத்தையும் ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டினால் அதனை திறக்க பிரதமர் மோடி வருகிறார். தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் பிரதமர் கண்டுகொள்ளவில்லை.

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் துதிபாடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி முறையாக வழங்கவில்லை. பயீர் காப்பீடு செய்த விவசாயிகள் முறையாக பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு முறையான காப்பீட்டு தொகை வழங்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.