Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியை திட்டியதால் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்...

plus 2 student suicide teacher scold Relatives refuse to take body road block protest
plus 2 student suicide teacher scold Relatives refuse to take body road block protest
Author
First Published Jun 14, 2018, 10:12 AM IST


நாகப்பட்டினம்
 
நாகப்பட்டினத்தில் ஆசிரியை திட்டியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலுகா பழைய கூடலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகள் வள்ளி (17). இவர், பழைய கூடலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

மாணவி வள்ளி, சரியாக படிக்கவில்லை என்று அந்தப் பள்ளியின் ஆசிரியை மாணவியை திட்டினராம்.  இதனால் மனமுடைந்த மாணவி வள்ளி, நேற்று காலை 7 மணி அளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் காவலாளர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மாணவி வள்ளியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. 

உடற்கூராய்வு முடிந்தவுடன் மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர்.

மேலும், மாணவி மரணத்திற்கு காரணமான ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் மாணவி வள்ளியின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவலாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "மாணவியின் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று துணை காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். 

இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios