கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தேர்வு தேதியை மறந்துவிட்டு தேர்வுக்கு செல்லாத பிளஸ்-1 மாணவர் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று பயந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டையை அடுத்த ஏணிபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (50). கூலித்தொழிலாளியான இவரது மகன் பரமசிவம் (16). இவர் நெல்குந்தி கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். மேலும், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று வரலாறு பொதுத் தேர்வு நடந்துள்ளது. இதை மறந்துவிட்ட பரமசிவம்,  தேர்வு எழுத செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 

பின்னர், தேர்வு நடந்ததை தனது நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்ட பரமசிவம், தனது பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்களே என்று பயந்து, பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதனால், மயக்க அடைந்த நிலையில் இருந்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள்  மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து  தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.