Asianet News TamilAsianet News Tamil

அணையா விளக்கு, வெண்கல சிலையுடன் ஜெ. நினைவிடம் - பிப்ரவரி 24ல் திறக்க திட்டம்

platinum statue-jayalalitha
Author
First Published Dec 9, 2016, 6:58 AM IST


அணையா விளக்குடன் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதனை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் ந்தேதி திறக்க  அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல், கடந்த 5ம் தேதி நள்ளிரவில் காலமானார்.

மறைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தொலைவில் ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ளது.

அவரது நினைவிடத்தை சுற்றி தற்காலிக இரும்பு தடுப்புவேலிகள் அமைத்து, அந்த இடத்தில் கிரானைட் கற்களை கொண்டு சமாதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

சமாதி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான திட்டங்களை செய்து வருகின்றனர். வெகுவிரைவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நினைவிடத்தில் அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதா பிறந்த தேதி மற்றும் மறைந்த நாள் இடம் பெறும்.

அவருடைய தாரக மந்திரமான, ‘மக்களால் நான். மக்களுக்காகவே நான்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டும் பணி முடிந்தவுடன், அவரது அடைமொழியான ‘அம்மா’ என பெயரிடப்பட உள்ளது.
எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்தில் இருப்பது போன்று அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும். இதற்கான 3 மாதிரி வரைப்படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழுமம் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையும் அமைக்கப்படும். அவருடைய வாழ்க்கை குறிப்பு, சாதனை திட்டங்களும் கல்வெட்டில் பொறிக்கப்படும். நினைவு தூணும் நிறுவப்படும்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி நினைவிடத்தை திறக்கும் வகையில் பணிகள் விரைவாக நடத்த, தற்போது ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios