பிளாஸ்டிக் கேரி பேக் தடையை கடுமையாக அமல்படுத்திய சேலம் பனியாரக் கடைகாரம்மா....குவியும் பாராட்டு

சேலம் பெரமனூர் 40 அடி ரோடில் பனியாரக்கடை வைத்துள்ள  சரோஜா  என்பவர் பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே பனியாரம் வழங்கப்படும் என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி அசத்தியுள்ளார். சென்னை போன்ற படித்தவர்கள் அதிகமுள்ள நகரங்களில் கூட பிளாஸ்டிக் பைகள்  அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தீமையை அறிந்து பிளாஸ்டிக் தடையை அறிமுகப்படுத்திய சரோஜாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டிற்கு கடந்த ஜூலை 1ந்தேதி முதல் தடை விதித்துள்ளது. இதையடுத்து சேலம் மாநகரத்தில் பல கடைகளில் மாநாகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து வருகின்றனர். ஆனாலும் பெரிய கடைகளில் கூட பிளாஸ்டிக் பைகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  சேலம் பெரமனூர் 40 அடி சாலையில் பனியாரக்கடை வைத்திருக்கும்  சரோஜா என்பவர் தன்னுடை கடைக்கு பனியாரம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக  பாத்திரம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

மேலும் இங்கு பிளாஸ்டிக் அனுமதி இல்லை..! பாத்திரம் கொண்டு வரவும்..! என பெரிய போர்டு எழுதி வைத்துள்ளார்..! பிஸாஸ்டிக் கேரி பேக் தவிர்த்த காரணத்தால் இந்த அம்மா தினசரி விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டும் கூட, மனம் தளராமல்  தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேல் கேரி பேக் தடையை அமுல்படுத்தி வருகிறார்.

இதையடுத்து சரோஜா அம்மாவை  தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த  நண்பர்கள் இன்று காலை சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி, மக்கள் முழுமையாக பாத்திரம் கொண்டு வரும் வரை,அந்த அம்மாவிற்கு ஏற்பட்ட நஷ்டங்களை சரிக்கட்ட ரூ1500 உதவித்தொகையும் அளித்து ,ஊக்கப்படுத்தியுள்ளனர்..!

இந்த சிறு பனியாரகடைகாரம்மாவிற்கு உள்ள பொறுப்புணர்வு பெரிய கடைக்காரர்களுக்கும் வரவேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.