நாமக்கல்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி டிஜிட்டல் இந்தியாவை நம்பியுள்ள பிரதமருக்கு ஒரு கோடி மின்னஞ்சல்கள் அனுப்ப உள்ளோம் என்று த.மா.கா. இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், பூங்கா சாலையில் தமிழ் மாநில காங்கிரசு இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் அருள் ராஜேஷ் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் என்.இளங்கோ,  மாநிலச் செயலர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.  

இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து, கடை வீதி,  பேருந்து நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு ஊர்வலமாகச் சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றார்.
 
பின்னர், அவர்  செய்தியாளர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். 

டெல்டா மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிகளவில் கையெழுத்துப் பெற்று பிரதமருக்கு அனுப்ப உள்ளோம்.  

மேலும்,  டிஜிட்டல் இந்தியாவை நம்பியுள்ள பிரதமருக்கு ஒரு கோடி மின்னஞ்சல்கள் அனுப்ப உள்ளோம். 

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது.  காவிரிப் பிரச்சனையில் அதிமுக,  திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறுகின்றனவே தவிர,  ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை. 
 
த.மா.கா. காவிரி பிரச்சனையில் தீவிரமாக போராடி வருகிறது.  விவசாயிகளை ஒன்று திரட்டி 6-ஆம் (அதாவது இன்று) தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்று கூறினார்.

இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் ராமலிங்கம்,  நகரத் தலைவர் சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.