பண்ருட்டி,

பண்ருட்டி அருகே சாலையோரத்தில் ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு குவியலாக கிடந்தன. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவை கழிவு ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது.

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் விழி பிதுங்கி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பண்ருட்டி அருகே சாலையோரத்தில் துண்டுதுண்டாக கிழிக்கப்பட்டு குவிந்து கிடந்த ரூபாய் நோட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ளது கொ.குச்சிப்பாளையம் கிராமம். இங்குள்ள குமாரமங்கலம் பிரதான சாலை அருகே எழுமேட்டான்வாய்க்கால் என்ற இடத்திற்கு செவ்வாய்க்கிழமை சிறு, சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்ட 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் குப்பைகளுடன், குப்பையாக கிடந்தன. பழைய நோட்டுகளான அவைகளின் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் தெரியாமல் இருப்பதற்காக மிகச்சிறிய துண்டுகளாக கிழிக்கப்பட்டு கொட்டப்பட்டிருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் கிராம மக்கள் எழுமேட்டான்வாய்க்கால் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த தோட்டுகளின் துண்டுகளை சேகரித்தனர்.

இதுபற்றி அறிந்த பண்ருட்டி கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு வேதரத்தினம், கடலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ரூபாய் நோட்டு குவியலை பார்த்தனர். இதுபோல் அபபகுதியை சுற்றியுள்ள கிராம மக்களும் கூட்டம், கூட்டமாக வந்து அந்த ரூபாய் தோட்டு குவியலை பா£த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

அந்த பணம் யாருடையது? எதற்காக அவை கிழித்து எறியப்பட்டன? அவை கள்ளப்பணமா? அல்லது அவை சேலம்–சென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த நோட்டுகளின் கிழிந்த பாகங்கள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன்முடிவில், துண்டுதுண்டாக கிடந்தவை ரூபாய் நோட்டுகளின் கழிவுகள் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் இடத்தில் அதன் கழிவுகள் (பணத்தூள்) மொத்தமாக பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு எரிபொருளுக்காக விற்பனை செய்யப்படும். அதன்படி, புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ஒரு மர வியாபாரி ரூபாய் நோட்டுகளின் கழிவுகளை மொத்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வாங்கி உள்ளார். அவரிடமிருந்து பண்ருட்டி ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த ஒரு மர வியாபாரி, தனது வேலைக்கு தேவையான கழிவுகளை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஆயுத பூஜைக்காக தனது மரவாடியை சுத்தம் செய்த போது, அங்கிருந்த 2 உருண்டை அளவிலான ரூபாய் நோட்டுக்கழிவுகள் மாயமானது. அந்த கழிவுகள் குப்பைக்கூடத்தில் சிதறிகிடந்தது.

எனவே, பண்ருட்டி அருகே சாலையோரத்தில் கிடந்தது வெறும் ரூபாய் நோட்டுகளின் கழிவுகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது” என்று கூறினார்.