Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்துகளில் அவமதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகள்; நடவடிக்கை எடுக்க கோரி திடீர் போராட்டம்...

physically challenged people Disrespect in government buses struggle to take action ...
physically challenged people Disrespect in government buses struggle to take action ...
Author
First Published May 12, 2018, 7:01 AM IST


விழுப்புரம்

அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் அவமதிக்கப்படுகின்றனர் என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் விழுப்புரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ராமச்சந்திரன் (28). மாற்றுத் திறனாளியான இவர், அரசால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி வேலைக்குச் சென்று வருகிறார்.
 
இவர் நேற்று முன்தினம் வேலைக்கு வந்துவிட்டு, விழுப்புரத்திலிருந்து அரசு புறநகர் பேருந்தில் திண்டிவனத்துக்கு புறப்பட்டார். அப்போது, நடத்துநரிடம் இலவச பேருந்து பயண அட்டையை காண்பித்தபோது, அதை ஏற்க மறுத்தார். 

மேலும், "இது நகரப் பேருந்துக்கான அட்டை , புறநகர் பேருந்தில் பயன்படுத்த முடியாது; பயணச்சீட்டு பெற்றுதான் பயணம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
இதனையடுத்து, ராமச்சந்திரன் ரூ.33 கொடுத்து பயணச்சீட்டை வாங்கி பயணம் செய்தார். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, விழுப்புரம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர், அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது அவர்கள், "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு இலவச பேருந்து பயண அட்டை வழங்கியுள்ளது. வேலைக்குச் செல்வோர் தினசரி வந்து செல்ல அதைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அரசுப் பேருந்து நடத்துநர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண அட்டைக்கான சலுகையை மதிக்காமல் அவமதித்து வருகின்றனர்.
 
நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகளில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை உள்ளது. அதற்கு, அடையாள அட்டை நகலை வழங்கினால், நடத்துநர்கள் சிலர் அதை கிழித்துப் போட்டு அவமதிக்கின்றனர்.
 
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகள் வழங்குவதில்லை. இதுகுறித்து, அதிகாரிகள் விளக்கமளிப்பதுடன், போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பினரை அதிகாரிகள் அழைத்துப் பேசினர். பின்னர், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் சலுகைகள் குறித்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படும்" என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios