பெட்ரோல் விற்பனை கமிஷன் தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் கமிஷனை தர ஒப்பு கொள்ளாவிட்டால் நாளை முதல் பெட்ரோல் பங்க் விற்பனை நேரம் குறைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர் முரளி தெரிவித்தார்.
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த மாதம் இரவு 7 மணி முதல் காலை 7.15 மணி வரை பங்க்குகள் மூடப்பட்டன.

இதைதொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை 2 நாட்களுக்கு நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தபோவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4770 பெட்ரோல் பங்க்குகள் திட்டமிட்டப்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்யவில்லை.
மேலும், 2ம் நாளாக இன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்றும் பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர் முரளி கூறியதாவது,
டீலர் கமிஷன் தொடர்பாக மும்பையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் கமிஷனை தர ஒப்பு கொள்ளாவிட்டால் நாளை முதல் பெட்ரோல் பங்க் விற்பனை நேரம் குறைப்பு போராட்டம் நடத்தப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பங்க் செயல்படும் என்றும், வங்கிகள் போல பெட்ரோல் பங்க்குகளுக்கு வார விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.
