விளிம்பு தொகை உயர்த்த கோரி பெட்ரோல் பங்க் மூடப்படும் – விற்பனையாளர் சங்கம் எச்சரிக்கை

கோரிக்கையை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை விளிம்பு தொகையை உயர்த்தி வழங்காததால் டீலர்களின்(விற்பனையாளர்கள்) வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே விளிம்பு தொகையை (டீலர் மார்ஜின்) உயர்த்தி வழங்கக்கோரி அகில இந்திய சங்க முடிவின்படி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

முதல் கட்டமாக வரும் 19ம் தேதி, 26ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து, விற்பனை நிறுத்த போராட்டம் நடத்துகிறோம்.

இதன்பிறகும் எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்த மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தி போராட்டம் நடத்துவோம்.

மேலும் மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிறுத்தப்படும். அடுத்த மாதம் 5ம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். அதேபோல் அடுத்த மாதம் 5தேதி முதல் விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களில் உள்ள சின்னங்களின் விளக்குகள் அணைக்கப்படும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடப்படும். அதாவது அன்று விற்பனை நடைபெறாது. அகில இந்திய அளவில் 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 4 ஆயிரத்து 500 பெட்ரோல் பங்க்குகள் உள்ளது. இந்த போராட்டம் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.