அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அங்கித் திவாரி என்பவர், மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மிரட்டில் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றபோது, அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்கள், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு ஜாமீன் மறுத்த நிலையில், அவரது நீதிமன்றக் காவலை வருகிற 24ஆம் தேதி வரை நீட்டித்து, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி குற்ற பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.

Captain Vijayakanth : விஜயகாந்தின் X தள பக்கத்தை, தன் பெயருக்கு மாற்றிய பிரேமலதா

இதனிடையே, அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகனா, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.