திருப்பூர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவரை விசாரணைக்கு என கர்நாடக காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை இதுவரை தெரிவிக்காததால் அவரைக் கண்டுபிடித்துத் தறுமாறு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பி.நாகராஜனிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீருடையில் இல்லாத மூன்று காவல் அதிகாரிகள், திருப்பூர் மாநகர், 15-வேலம்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் சசிகுமார் ஆகியோர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருப்பூர் வடக்கு பகுதிச் செயலாளரான கலீமுல்லா என்பவரை ஆகஸ்ட் 15-ஆம் தேதி செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பனியன் வியாபாரம் தொடர்பாக நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நேரில் சந்தித்தவுடன் தாங்கள் கர்நாடக காவல் துறையினர் என்றும், குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இதுவரை அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமலும், எங்கு வைத்துள்ளனர் என்பதை அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தாமலும் அலைக்கழித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கலீமுல்லா எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாநகரக் காவல் ஆணையர், கர்நாடக மாநிலத்தில் அவர் எந்த காவல் நிலையத்தில், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்யவும், அதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.