நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக சரிந்துள்ளது.

152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 110.70 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 300 கன அடியாகவும், இருப்பு நீர் 1022 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

71 அடி உயரமுள்ள வைகையின் நீர் மட்டம் 24.57 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை குடி நீருக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு நீர் 198 மில்லியன் கன அடியாக உள்ளது.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. வெளியேற்றமும் இல்லை. இருப்பு நீர் 132.45 மில்லியன் கன அடியாக உள்ளது. 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட் டம் நேற்று 6.56 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 3 கன அடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. இருப்பு நீர் 0.73 மில்லியன் கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 110.70 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110 அடிக்கு கீழ் குறைந்தால் தேக்கடியில் தற்போது உள்ள படகுத்துறைக்கு படகுகள் கொண்டு வரமுடியாது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் படகுகள் நிறுத்தப்படும். எனவே, அங்கு தற்காலிக படகுத்துறை அமைக்க கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது. முதியவர்களும், பெண்களும் ஏரிக்கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படகு சவாரி செல்வது சிரமமான காரியம். இதனால் தேக்கடியில் படகு சவாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.