ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பேரறிவாளனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால், அவருக்கு சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதற்கிடையில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தனது மகனை விடுதலை செய்யக்கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன், பேரறிவாளனை பரோலில் விடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கான பதில் இன்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு இன்று காலை திடீரென உடல் நிலை பாதித்தது. உடனடியாக அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருககு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.