திருவள்ளூர்

திருவள்ளூரில், நிலத்தடி நீரை திருடிய 4 டேங்கர் லாரிகளை நள்ளிரவில் சிறைப்பிடித்த மக்கள் அவர்களை காவலாளர்களிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர். உரிமையாளரை தேடி வருகின்றனர். லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது விளாங்காடுபாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியான கண்ணம்பாளையத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

கண்ணம்பாளையம் கிராமத்தில் தனியார் சிலர் 15-க்கும் மேற்பட்ட இராட்சத குழாய்கள் அமைத்து, நிலத்தடி நீரை திருடி டேங்கர் லாரிகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனராம். இதனால் ஊராட்சி கிணறுகளில் தண்ணீர் இன்றி குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் விளாங்காடு - மணலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த் துறையினர் நிலத்தடி நீர் திருடப்படும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளுக்கும் "சீல்' வைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

ஆனால், கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றில் சனிக்கிழமை நள்ளிரவு 4 டேங்கர் லாரிகளில் சிலர் நிலத்தடி நீரை திருடிக் கொண்டிருந்தனர். 

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் 4 டேங்கர் லாரிகளையும் சிறைபிடித்தனர். ஆனால், லாரி ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர்.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ், புழல் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, 4 லாரிகளையும் பறிமுதல் செய்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
நிலத்தடி நீரைத் திருடிய ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.