People who were besieged by railway officials who demolished houses Returning officers ...
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் தண்டவாளம் அருகே ஐம்பது வருடங்களுக்கு மேலாக குடியிருப்போரின் வீடுகளை இடிக்க வந்த இரயில்வே அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏவால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அதிகாரிகள் திரும்ப சென்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், இரத்தினபுரி கண்ணப்பன்நகர் வழியாக இரயில்வே தண்டவாளம் ஒன்று செல்கிறது. இங்குள்ள சின்னராஜ்நகரில் இருக்கும் பல வீடுகள் இரயில் தண்டவாளத்தின் அருகே இருக்கின்றன. இதனிடையே பாதுகாப்பு கருதி தண்டவாளத்தில் இருந்து 100 அடி தொலைவில் இருக்கும் வீடுகளை இடிக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையடுத்து இரயில்வே அதிகாரிகள் நிகழ்விடத்திற்குச் சென்று எத்தனை வீடுகள் இரயில் தண்டவாளத்தில் இருந்து 100 அடி தொலைவுக்குள் இருக்கிறது என்று கணக்கெடுத்தனர். அதில் 110 வீடுகள் 100 அடி தொலைவுக்குள் இருப்பது தெரியவந்தது.
எனவ, அந்த வீடுகளில் குடியிருந்து வருபவர்கள் உடனடி யாக காலி செய்யுமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டது.
உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்தஸ்மூன்று மாதங்களுக்கு முன்பு ஆட்சியரைச் சந்தித்து, தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை இடிக்கவுள்ளதால், மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கோரினர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு இரயில்வே அதிகாரிகள், இரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் சிவதாஸ் தலைமையில் ஏராளமான காவலாளர்களுடன் அங்கு சென்றனர். வீடுகளை இடிப்பதற்காக அங்கு பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டன.
இது குறித்த தகவல் பரவியதும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானந்தாகாலனி - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதுப்பாலம் அருகே கூடினர். அவர்கள், "நாங்கள் இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு வீடுகளை இடித்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. எனவே அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் வீடுகளை இடிக்க விடமாட்டோம்’ என்றனர்.
பின்னர் இரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. மற்றும் இரத்தினபுரி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, இடிக்கப்பட உள்ள வீடுகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார். மேலும், "மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளை இடிக்கக் கூடாது" என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இரயில்வே அதிகாரிகள் வீடுகளை இடிக் கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். மக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
