திருநெல்வேலி

சுரண்டையில் தாலுகா மருத்துவமனை கட்ட ரூ.1 கோடியே 21 இலட்சம் நிதி ஒதுக்கி ஒருவருடமாகியும் எந்தப் பணிகளும் தொடங்காததால் சினம் கொண்ட மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகாவுக்கு உரிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுரண்டை சாலையில் காவல் நிலையம் அருகே இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிக்கு ரூ.1 கோடியே 21 இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

எனவே, வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை கட்டித்தர வேண்டி ஊர் மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதற்கும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அறநிலையத்திற்கு சொந்தமான அந்த வெற்று இடத்தில் மருத்துவமனை கட்டிக் கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்குள்ள தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர், பீடி சுற்றும் பெண்கள், வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வீரகேரளம்புதூரில் நேற்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.