Asianet News TamilAsianet News Tamil

மாதக்கணக்கில் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம்…

People who suffered without drinking water for months held in protest
People who suffered without drinking water for months held in protest
Author
First Published Aug 8, 2017, 7:33 AM IST


திண்டுக்கல்

கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டத்தால் சினம் கொண்ட மக்கள் கொடைரோட்டில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி ஊராட்சி கௌண்டன்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்தப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கடுமையான வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று தண்ணீர் எடுத்தும், தண்ணீரை காசு கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இதனால் சினம் கொண்ட அப்பகுதி மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் வத்தலக்குண்டு– மதுரை சாலையில் மறியல் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்” என்றும், “புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்” என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios