People who are not without drinking water for one and a half months Bus passing through the road ...
திருப்பூர்
திருப்பூரில் ஒன்றரை மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் சினம் அடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பக்கம் வந்த பேருந்து, லாரி, டெம்போ போன்றவற்றை சிறைப்பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கெங்கநாயக்கன்பாளையம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதிக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் சினம் கொண்ட அந்தப் பகுதி மக்கள் நேற்று கெங்கநாயக்கன்பாளையம் நால்ரோட்டில் திடீர் சாலை மறியலிலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மற்றும் சரக்குந்து, டெம்போ ஆகியவற்றை சிறைப்பிடித்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் பள்ளிக் குழந்தைகளும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த அவினாசிபாளையம் காவலாளர்கள், மற்றும் பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியம், வருவாய் அதிகாரி சபரி, பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் மக்கள் கூறியது: "எங்கள் பகுதிக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக அத்திக்கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. எங்கள் பகுதியில் மூன்று ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அதில் 200 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. மற்றொரு இடத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் மோட்டார் கிடையாது.
மழைநீர் சேகரிப்பு குட்டைக்கு அருகில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் என்பது கிடையாது. தற்போது அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்றுதான் குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.
அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீருக்காக குடத்தை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதனால்தான் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, "உடனடியாக அத்திக்கடவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது.
