திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு சரமாரியாக அடிகொடுத்துவிட்டு அவரை மக்கள், காவல் நிலையத்திலும்  ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபுலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அசோக்குமார். இவர், தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் இராட்டினமங்கலம் கூட்ரோட்டில் உள்ள வங்கிக்கு பணம் செலுத்த வந்திருந்தார். 

வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்று பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ந்தார். 

இந்த நிலையில, காணாமல்போன மோட்டார் சைக்கிளை இராட்டினமங்கலம் பைபாஸ் சாலை அருகே மர்ம நபர் ஒருவர் தள்ளிச் சென்றதை, மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பார்த்துவிட்டு அலறினார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற நபரை பிடித்து விசாரித்தபோது, அதை திருடியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு மக்கள் சரமாரி அடிகொடுத்து, ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உதவி ஆய்வாளர் சங்கர், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், பிடிபட்ட நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவில் உள்ள அறவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (35) என்பதும், இவர், மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து காவலாளர்கள் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.