தேனி

தேனியில் பேருந்து வசதி இல்லாததால் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்யும் மலைக் கிராமத்துக்கு மக்கள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள ஏழு மலைக் கிராமங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னமனூருக்கே செல்ல வேண்டியுள்ளது.

இப்பகுதிக்கு கம்பம் மற்றும் தேனி பனிமனையில் இருந்து தலா ஒரு பேருந்து இயக்கப்படும். ஆனால் இப்பேருந்துகளும் சரிவர இயக்கப்படாததால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாள்களாக கம்பத்திலிருந்து ஒரே ஒரு பேருந்து மட்டும் இப்பகுதிக்கு இயக்கப்படுவதால் 40 பேர் பயணம் செய்ய வேண்டிய அப்பேருந்தில் 100-க்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். 

இது தவிர பேருந்தின் உள்ளெ இடமில்லாததால் மேற்கூரையில் பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறியது:

“இப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்ப்டடது.  ஆனால், எவ்வித முன்னேற்றமும் இல்லை. 

கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் ஆபத்தான ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைச்சாலையில் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாகும்.

எனவே மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உரிய நடவடிக்கை எடுத்து, ஹைவேவிஸ் -மேகமலை கிராமங்களுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்தை சரி செய்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை வேண்டும்” என்ரு கோரினர்.