People suffered without drinking water for weeks held in protest
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வாரக் கணக்கில் குடிநீர் இல்லாமல் தவித்து வந்த மக்கள் பொறுமையிழந்து சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் சோமங்கலம், மேட்டூர், இந்திராநகர், போன்ற பகுதிகளில் உள்ளன. இந்தப் பகுதிகளில் 1000–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை.
இதற்கு, ஒரு சிலர் முறைகேடாக தொட்டி அமைத்து அதில் தண்ணீரை அதிகளவில் சேமித்து வைத்து கொள்வதே காரணம் என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொறுமையிழந்த பொதுமக்கள் சோமங்கலம் சாலையில் நேற்று வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் திடீரென சோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "சீராக குடிநீர் வழங்க வேண்டும், பழுதான மின்மோட்டார்களை சரிசெய்ய வேண்டும், தெருவிளக்குகளை சீரமைத்து தரவேண்டும்" என்று முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வந்த குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் பொதுமக்களிடம், "சீராக குடிநீர் வழங்கப்படும், தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
