500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி, இந்த உத்தரவு ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் நேற்று நள்ளிரவு முதல் அமலாகிறது என்று தெரிவித்தார். இதனால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டாலும், நடுத்தர மக்கள், ஏழைகள், சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வங்கி, ஏடிஎம் இன்றும், நாளையும் இயங்காது என்பதால் பெரிய ஷாப்பிங் மால்கள், ஆடை நிறுவனங்கள், உணவகங்களில் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம்.

ஆனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, சில்லறை பொருட்கள், சிகரெட், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை வாங்கி சென்ற போது ரூ.500 நோட்டை வாங்க கடைக்காரர்கள் மறுப்பதால் சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான பொருளை வாங்க முடியாமல் விரக்தி அடைந்துள்ளனர்.
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று பாமர மக்களிடம் கடைக்காரர் சொல்லி திருப்பி கொடுக்கும்போது, எதற்காக செல்லாது என்கிறார்கள் என்ற விவரம் தெரியாமல் திகைத்தனர். சிலர் ஒருவேளை கள்ளநோட்டாக இருக்குமோ என்று அதை ஏற்கனவே வாங்கிய கடைக்காரரிடம் கொண்டு போய் திருப்பி கொடுத்ததால், ஒரு புரிந்துணர்வு இல்லாமல் சர்ச்சையும், சண்டையும் சில இடங்களில் நடக்கிறது.

பெட்டிக்கடைகளில் சரியான சில்லறை கொடுத்தால் தான் தேவையான பொருட்கள் கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறுவதால, பெரும்பாலானோர் வெறும் கையோடு வீடு திரும்பினர். இதனால் சிறு, குறு வியாபாரிகளின் வியாபாரமும் முடங்கியது.
இந்நிலையில் ஏடிஎம் 2 நாட்கள் இயங்காது என்பதால் அவசர தேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதால், முன்கூட்டியே வீட்டு தேவைக்காகவும், பிற தேவைக்காகவும் ஏடிஎம்மில் இருந்து ரூ.500, ரூ.1000 என்று பணத்தை எடுத்துவைத்தவர்கள், எந்த வேலையும் முடிக்க முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். இந்த அவதியும், அவலமும் டிசம்பர் 30ம் தேதி வரை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
