People struggle to lock the Anganwadi Center at Karur
கரூர்
கரூரில் அங்கன்வாடி பணியாளர்களேயே பணியில் அமர்த்த வேண்டும் என்று அங்கன்வாடி மையத்துக்கு பூட்டுபோட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு வெரியம்பட்டி குறுஅங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் 2017-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் திருமக்கம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வில் சென்றார்.
ஆறு மாதங்கள் அங்கே பணி செய்துவிட்டு பின்னர் மீண்டும் விருப்பத்தின்பேரில் மாவட்ட அலுவலர்களின் ஆலோசனை பெறாமல் நேரடியாக இயக்குனர் மூலமாக பணி ஆணை பெற்றுக்கொண்டு கரூர் மாவட்டம், மாமரத்துப்பட்டி மையத்திற்கு பொறுப்பேற்க வந்தாராம்.
இதனையடுத்து, கடவூர் ஒன்றிய பணி உயர்வு பட்டயலில் உள்ள அமைப்பாளர்களான சந்திரா, காந்திமதி உள்பட 10 பேரின் பணி உயர்வு பாதிக்கப்படும் என்றும், எனவே, இந்த ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களேயே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கூறி ஊர் மக்கள் மாமரத்துப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு பூட்டுபோட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் செல்வி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து மக்கள் அலுவலகத்தை திறந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மக்களின் போராட்டம் குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் பூட்டப்படும்" என்று தெரிவித்தனர்.
