People struggle to cook a luxury shop permanently

நாமக்கல்

குமாரபாளையத்தில் இருக்கும் சாராயக்க் கடையை மூட வலியுறுத்தி கடையின் முன்பு சமையல் செய்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து அருவங்காடு ஜெ.ஜெ.நகரில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சாராயக் கடை ஒன்று திறக்கப்பட்டது.

இந்த சாராயக் கடை குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியிலும், அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வழியிலும் உள்ளது. எனவே, இந்த சாராயக் கடையை மூட வேண்டும் என மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதனால் சினம் கொண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கௌண்டர் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று சாராயக் கடையை முற்றுகையிட்டனர். இதனால் சாராயக் கடை விற்பனையாளர் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

எனினும் மக்கள் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடை முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது தாசில்தார், ஆட்சியரை சந்திக்க நாமக்கல் சென்றிருப்பதாக மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ‘தாசில்தார் வரும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்” என்றும், சாராயக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் சாராயக் கடை முன்பு சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் காவலாளர்கள் மற்றும் வருவாய்துறையினர் அங்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் தரப்பில், “பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் நேரில் வரவேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, “தாசில்தாரை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசி சாராயக் கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு செய்யலாம்” என்று ஆய்வாளார் வேலுதேவன் கூறினார்.