People struggle to ask for uninterrupted power supplies The government bus hit prison ...
திருவள்ளூர்
திருவள்ளூரில் தடையில்லா மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று அரசு பேருந்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து காயலார்மேடு கிராமத்திற்கு செல்லும் வழியில் சுமார் 60 குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் குடியிருப்பு பகுதிக்கு அருகேவுள்ள டிரான்ஸ்பர்மர் ஒன்றில் இருந்து தனியார் பட்டா நிலம் வழியாக மின் கம்பம் அமைத்து ஏற்கனவே மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது.
வார்தா புயலின்போது மேற்கண்ட இரண்டு மின்கம்பங்களும் கீழே விழுந்துவிட்டதான் தங்களது பட்டா நிலத்தில் மின்கம்பம் அமைத்திட அந்த தனியார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து சற்று தொலைவில் மற்றொரு டிரான்ஸ்பார்மர் மூலம் அந்த குடியிருப்பு பகுதிக்கு மின்துறையினர் மாற்று வழியில் தற்காலிகமாக மின் விநியோகம் செய்து வந்தனர்.
இதன்மூலம் அந்தப் பகுதிக்கு முறையான மின் வினியோகம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மின்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த மின் வினியோகத்தால் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டனர். குடி தண்ணீருக்கான மோட்டார்களை கூட அவர்களால் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தங்களது குடியிருப்பு பகுதிக்கு ஏற்கனவே இருந்ததுபோன்று தடையில்லா மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று பெத்திக்குப்பம் சந்திப்பு சாலையில் இருந்து காயலார்மேடு செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், சாலையில் காய்ந்த வாழை மரம், குடிநீர் டப்பாக்களை தடுப்பாக வைத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை அவர்கள் சிறை பிடித்தனர்.
இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவலாளர்கள் அவர்களிடம் பேசி, "ஏற்கனவே இருந்த இடத்திலேயே புதிய மின் கம்பங்களை அமைத்து, குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்து மின் விநியோகம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தச் சாலை மறியலால் அஙகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
