people still praises former director ramanan and criticise chennai meteorological department
வடகிழக்குப் பருவ மழை துவங்கியது முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது. பருவ மழை துவங்கப் போவது குறித்த செய்தியை வானிலை ஆய்வு மையம் கடந்த மாத இறுதியில் அறிவித்தபோதே, பலரும் வழக்கமான சாதாரண அறிவிப்பு போலவே கருத்தில் கொண்டார்கள்.
ஆனால், கன மழை பெய்து சென்னை நகரின் பல இடங்களில் நீர் வடிய வழியின்றி மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குறிப்பாக, அலுவலகம் செல்வோர் சாலைகளில் பயணிக்க பெரிதும் சிரமப்பட்டனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம், நவ.4ம் தேதி வரை கன மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கன மழை பெய்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது. ஆனால் நேற்று காலை வானம் சற்றே வெறிச்சிட்டது. இதனால் மழை இருக்காது என்று பொதுமக்கள் பலர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வானிலை ஆய்வு மையமும் அவ்வாறே கூறியது.
நேற்று காலை சென்னை வானிலை மைய இயக்குநர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, “சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை, எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.
ஆனால், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் உள்ள தகவல்களை வைத்துக் கொண்டே, தனியார் வானிலை ஆய்வு மையங்களும், வல்லுநர்களான தனி நபர்களும் துல்லியமாக, அடுத்து எத்தனை மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் அல்லது மிதமான மழைதானா? என உடனுக்குடன் அறிவித்து வந்தனர். மேலும், காலை வெறிச்சோடி இருந்தாலும், மதியத்துக்குப் பின்னர் மேகக்கூட்டம் கடந்து வரும், மாலை நேரத்தில் கன மழை பெய்யும்... இப்போது வானம் வெறிச்சிட்டிருப்பதை வைத்து தவறாக எடை போடாதீர்கள்... வானில் மேகக் கூட்டங்கள் கடந்து வருவதைக் காண முடிகிறது என்றெல்லாம் தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்றைய கன மழை, அதை மெய்ப்பித்து விட்டது. ஆனால், வானிலை ஆய்வு மைய இயக்குனரின் கூற்றை பொய்யாக்கி விட்டது.
இந்தத் தகவல்களை நம்பி பலரும் நேற்று அலுவலகங்களுக்கும் வெளியிடங்களுக்கும் சென்று, இரவு நேரத்தில் மாட்டிக் கொண்டனராம். இதை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு,
ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அதி நவீன கருவிகளைக் கொண்டு செயல்படும் சென்னை வானிலை ஆய்வு மையம் யாருக்காக செயல்படுகிறது? என வலைத்தள வாசிகள் கடும் கேள்விக் கணைகளை எழுப்பி வருகின்றனர். வானிலை ஆய்வு மைய இயக்குனராக முன்னர் இருந்த ரமணனை இப்போதும் நினைவு கூர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
