மதுரை

நீண்ட போராட்டத்திற்கு பிறகு கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்திய மக்களிடம், மீண்டும் மண் அள்ளுவது குறித்து வட்டாட்சியர் தலைமையில் சமரசம் பேசவந்த அதிகாரிகளை கிராமத்துக்கு மக்கள் முற்றுகையிட்டனர். 

பெருங்குடியை அடுத்த நல்லூரில் உள்ள பெரிய கண்மாயில் மண் அள்ளுவது தொடர்பாக வியாழக்கிழமை சமாதானம் செய்ய வந்த வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
 
மதுரை மாவட்டம், பெருங்குடியை அடுத்த நல்லூரில் உள்ள பெரிய கண்மாயில் கடந்தாண்டு முதல் மண் அள்ளப்பட்டு வருகிறது. 

இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக ஆழமாக அளவு மண் அள்ளப்படுகிறது என்று இப்பகுதி மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து  வந்தனர்.  மேலும், இதுகுறித்து இப்பகுதியினர் கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்தனர். 

இந்த நிலையில் கண்மாயில் கடந்த 29-ஆம் தேதி மண் அள்ளுவதற்காக கொண்டுவரப்பட்ட ஜேசிபி மற்றும் லாரிகளை இப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கல் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இந்தப் பகுதியில் இனி மண் அள்ளப்படாது என்று உறுதியளித்து மக்கள் சிறைப்பிடித்த வாகனங்களை மீட்டனர். 

இந்த நிலையில் மதுரை தெற்கு வட்டாட்சியர் சுந்தரமுருகன் தலைமையில் அதிகாரிகள் நல்லூர் கிராமத்துக்கு சென்று கண்மாயில் மண் அள்ள அனுமதிக்கும்படி இந்த மக்களிடம் சமரசம் பேசினார். 

இதனை ஏற்க மறுத்த மக்கள், வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். மக்களின் ஆவேசத்தை கண்டு வட்டாட்சியர் அங்கிருந்து விரைந்தார்.