விழுப்புரம்

விழுப்புரத்தில் பல்வேரு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் குடிநீர் கேட்டு அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 1477 கிராம ஊராட்சிகளில் கிராம தன்னிறைவு இயக்கத்தின் கீழ் வங்கிகளில் ஜன்தன் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடு திட்டம், விபத்து காப்பீடு திட்டம், எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், 

அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், குழந்தைகள், தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டம், சுகாதார திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மே மாதம் 5-ஆம் தேதிக்குள் நிறைவேற்றுவதற்கான பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 227 கிராம ஊராட்சிகளில் தன்னிறைவு இயக்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதா? என்பதை கண்காணிக்க இந்திய வருவாய் துறை அதிகாரி ஸ்டீபன் என்பவர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் ஊராட்சியில் கிராம தன்னிறைவு இயக்க திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஸ்டீபன் பங்கேற்று கிராம தன்னிறைவு இயக்க திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் முடியும் தருவாயில் அங்கிருந்த கிராம மக்கள் அனைவரும் திடீரென எழுந்து, அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் கிராமத்தில் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என்று முறையிட்டனர்.

இதுகுறித்து அம்மக்கள் கூறியது: "மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது. 

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் யாரும் வந்து சரிசெய்வதில்லை. எங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். கூடுதலாக ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இதனைக் கேட்டறிந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், 
"குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், அதோடு ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி, கூடுதலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். 

இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.