விழுப்புரம்,
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை தேடி இரண்டாவது நாளாக வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. திறக்கப்படும் என்று கூறப்பட்ட ஏ.டி.எம். மையங்கள் பெரும்பாலும் மூடியேக் கிடந்தன.
திருட்டுப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வியாழக்கிழமை நாடு முழுவதிலும் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்தனர். இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 506 வங்கிகளிலும் இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமாக அனுப்பும் பணத்தை விட கூடுதலாக பணம் அனுப்பியது. இந்த தொகை வங்கிகள் மூலம் மக்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் மதியம் 2 மணியளவில் பெரும்பாலான வங்கிகளில் பணம் தீர்ந்துவிட்டதால் பல மணி நேரம் காத்திருந்தும் பணம் கிடைக்காத மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் நேற்றும் 2–வது நாளாக மக்கள் தங்களிடமுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்துச்சென்ற வண்ணம் இருந்தனர். காலை 6 மணி முதலே பெரும்பாலான வங்கிகளில் பொதுமக்கள் காத்திருந்ததை காணமுடிந்தது. இதனால் காட்டிலும் நேற்று கூடுதல் கால்வலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களை வரிசையில் ஒழுங்குபடுத்தினர். ஒவ்வொரு வங்கிகள் முன்பும் சாலையோரமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வங்கிகள் காலை 10 மணிக்கு திறந்தவுடன் 5 பேர் முதல் 10 பேர் வரை வரிசையாக வங்கிக்குள் செல்ல காவலாளர்கள் அனுமதித்தனர். அதன்படி அவர்கள் வங்கிக்குள் சென்று செலானை நிரப்பி அடையாள அட்டை நகலை வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து தங்களிடமுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்.
மேலும் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் பண பரிமாற்றம் நடைபெறாத நிலையில் நேற்று கிராமப்புற வங்கிகளில் பண பரிமாற்றம் நடைபெற்றது. இதனால் கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு எளிதில் சென்று 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.4 ஆயிரம் வரை புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 100 ரூபாய் சில்லரை நோட்டுகளாகவும் பெற்றுக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 341 ஏ.டி.எம். மையங்களும் நேற்று செயல்படும் என்ற ஆவலுடன் ஒவ்வொரு ஏ.டி.எம். மையம் முன்பும் காலை 8 மணி முதலே பொதுமக்கள் குவிந்தனர். மக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம். மையங்களில் 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டன. பெரும்பாலும் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களில் மட்டுமே பணம் வந்தது. பணத்தை எடுத்துச்சென்ற பொதுமக்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
தனியாக இயங்கும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் பூட்டியே கிடந்தன. இதனால் அங்கு பல மணி நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
