விருதுநகர்

விருதுநகரில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலைப் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்றும் மணல் அள்ளிக் கொண்டு செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் மக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்,  பொறுமையிழந்த மக்கள் மற்றும் மாணவர்கள் "மணல் திருட்டைக் கண்டித்தும், அதனை தடுக்க வலியுறுத்தியும்" திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமும் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவில்லிபுத்தூர் நகர காவலாளர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், "இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். இதனையேற்று மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் இந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.