Asianet News TamilAsianet News Tamil

தடையற்ற மின்சாரம் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்; பெரம்பலூர் - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு...

people road block protest asking electricity supply Traffic damage on Perambalur - Ariyalur road
people road block protest asking electricity supply Traffic damage on Perambalur - Ariyalur road
Author
First Published Jun 11, 2018, 8:42 AM IST


பெரம்பலூர்
 
பெரம்பலூரில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் - அரியலூர் சாலையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் நகர விஸ்தரிப்பு பகுதிகளான 4 சாலை அருகே உள்ள அன்பு நகர், அண்ணாமலையார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. 

அன்புநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு சீரான மின்சாரமும் வழங்கப்படவில்லை. மேலும் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அன்பு நகரில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை பெரம்பலூர் - அரியலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், “அன்பு நகர் பகுதிக்கு, சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பணியில் இருந்த மின்சார வாரிய அதிகாரிகள், நகரப்பகுதிக்கு வழங்கும் மின்சாரத்தை இந்த பகுதிக்கு மாற்றி கொடுத்தனர். 

இதனையடுத்து 6 மாதம் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென நகரப்பகுதி மின்சாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் கிராம பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் அன்பு நகர் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால், அன்றாட பணிகளை கூட சரியாக செய்ய முடியவில்லை. இதனால்தான் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்" என்று அவர்கள் தெரிவித்தனர். 

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காவலாளர்கள் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மின்சார வாரிய அதிகாரிகள், "சீரான மின்சாரம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தனர். 

இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios