Asianet News TamilAsianet News Tamil

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டி மக்கள் கோரிக்கை; செவிசாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?

People request set basic facilities immediately to District Administration
People request set basic facilities immediately to District Administration
Author
First Published Jul 2, 2018, 9:21 AM IST


திருவள்ளூர்
 
திருவள்ளூரில் உள்ள சிறுனை பகுதியில் பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம், மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ளது கொசவன்பேட்டை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாத்தம்மன் கோயில் பகுதியில் உள்ளது ஆரணி ஆற்றங்கரை. இந்த ஆற்றங்கரையில் 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 வருடங்களாக குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். 

மழைக் காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அஞ்சாத்தம்மன் கோயில் பகுதியில் உள்ள குடிசைகள் அடித்துச்செல்வதும், அல்லது மழையில் ஊறி இடிந்து விழுவதும் என்று அடிக்கடி அசாம்பாவிதங்கள் நடந்தன. 

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதும் வெள்ளம் வடிந்தபிறகு மீண்டும் குடியமர்த்தி வைப்பதும் வழக்கமானதே.

இவற்றைக் கருத்தில்கொண்டு அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் தொடர் மறியல் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர். எனினும், வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

அதன்பின்னர், "தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் அடுத்து உள்ள ஜெ.ஜெ.நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுனை பகுதியில் அதிகாரிகள் ஏழு மாதங்களுக்கு முன்னர் வீடுகள் கட்டி கொள்ள இடம் ஒதுக்கினர். 

இங்கு 47 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் சிறுனை பகுதியில் 8 தெரு விளக்குகள், 8 தெரு குழாய்கள் அமைக்கப்பட்டன. 

"வீடுகளுக்கு மின் இணைப்பு கோருவோர் வைப்புத்தொகை செலுத்தினால் மட்டும்தான் மின் இணைப்பு வழங்கப்படும்" என்று மின்வாரிய அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் இரவு நேரங்களில் இருட்டில் அச்சத்துடன் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

அதேபோல, "வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க வைப்புத் தொகை செலுத்த வேண்டும்' என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் காலை நேரத்தில் அரை மணி நேரம் தெரு குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து வைத்து மறுநாள் காலை வரை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

இந்தப் பகுதியை சேர்ந்த மாணவ - மாணவிகள் பாலவாக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கரடு முரடான பாதை வழியாக மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்கின்றனர். இந்த பாதையில் வாகனங்களில் சென்றுவர முடியாத நிலை உள்ளது. 

எனவே, "மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios