People protest to build police checkpoints Threatening to give up family cards if violated ...
திருநெல்வேலி
காவல் சோதனை சாவடி கட்டிடம் கட்டக் கூடாது என்றும் மீறி கட்டிடம் கட்டினால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் என்றும் செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியான புளியரையில் மோட்டார் வாகன தணிக்கை சாவடி, காவல் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி ஆகியவை இயங்கி வருகின்றன. இதில் காவல் சோதனை சாவடி மட்டும் தனியார் இடத்திலிருந்து வருகிறது.
போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதிகள் இல்லாமல் காவலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பான காவலாளர்களின் கோரிக்கையின்பேரில், புளியரை பறவன்பத்துகளம் அருகில் அரசு நிலத்தில் காவல் சோதனைச் சாவடிக்கு புதிய நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும், புதிய கட்டிடம் கட்டப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் செங்கோட்டை ஆய்வாளர் சுரேஷ்குமார், புளியரை உதவி ஆய்வாளர் முரளி, வேல்முருகன் மற்றும் காவலாளர்கள் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இந்த இடத்தில் காவல் சோதனை சாவடி அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை காவல் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று செங்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டனர். "பறவன்பத்துகளம் பகுதியில் காவல் சோதனை சாவடி கட்டிடம் கட்டக் கூடாது. அதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. மீறி கட்டிடம் கட்டினால் நாங்கள் எங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்" என்று கூறி தரையில் உட்கார்ந்தபடி அனைவரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார், ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சோதனைச் சாவடி கட்டிடத்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு? என்று அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு மக்கள், "இந்தச் சோதனை சாவடியை கடந்துதான் எங்கள் பகுதிக்கு உணவுப் பொருட்களை நாங்கள் கடையில் இருந்து வாங்கி வரும்போது சோதனை என்ற பெயரில் எங்களுக்கு காவலாளர்கள் தொந்தரவு கொடுப்பார்கள்" என்று கூறினர்.
அதற்கு ஆய்வாளர் சுரேஷ்குமார், அப்படி தொந்தரவு எதுவும் இருக்காது. உங்களுக்கு காவலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அப்படி தொந்தரவு கொடுத்தால் நீங்கள் என்னிடம் கூறுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன் என்று மக்களிடம் பேசினார். ஆனால், மக்கள் சம்மதிக்கவில்லை.
பின்னர் தாசில்தார் செல்வகுமார், உங்கள் கோரிக்கை மனுவை கொடுங்கள். நான் மாவட்ட ஆட்சியரிடம் கூறி உங்களுக்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
பல மணி நேரம் முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்துச் சென்றதால் தாலுகா அலுவலக வளாக பகுதி பரபரப்பானது.
