people protest for opening a new liquor shop in residence

திருப்பூர்

திருப்பூர் மணியக்காரம்பாளையம் ஏற்கனவே ஒரு சாராயக் கடை இருக்கும் நிலையில் குடியிருப்புப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், மணியக்காரம்பாளையம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் புதிய டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது.

ஏற்கனவே அந்தப் பகுதியில் ஒரு டாஸ்மாக் சாராயக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் புதிய டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சாராயக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் அந்த டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதன்படி நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் கூடினர்.

பின்னர் அங்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலாளர்கள், போராட்டம் நடந்த வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மணியக்காரம்பாளையம் சாலையில் அமர்ந்து சாலை மறியலும் செய்தனர்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியது:

“குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியின் 100 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் சாராயக் கடை செயல்படுகிறது. இந்த நிலையில் குடியிருப்புப் பகுதிகளின் நடுவே புதிதாக இன்னொரு டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த இடத்தை சுற்றிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இந்த கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊரக காவல் ஆய்வாளர் தனசேகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் இந்தக் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கொடுத்தனர்.