தருமபுரி

புதிதாக சாராயக் கடைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஆட்சியரகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குண்டலப்பட்டி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். நேற்று நடந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமைத் தாங்கி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.  மேலும், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தர்மபுரி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குண்டலப்பட்டியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனு:

“குண்டலப்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு சாராயக் கடையை தொடங்க கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சாராயக் கடையை திறந்தால் எங்கள் கிராமத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவதோடு தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். எங்கள் கிராமத்தில் சாராயக் கடை திறக்கக் கூடாது என்று ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும், கல்லூரிகள் நிறைந்த இந்தப் பகுதியில் சாராயக் கடை திறந்தால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த புதிய சாராயக் கடைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.