காஞ்சிபுரம்

தொன்மை வாய்ந்த நகரமான காஞ்சிபுரம் மாசற்ற, தூய்மையான நகரமாக மாறுவதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலூவாடி ஜி. ரமேஷ் வலியுறுத்தினார்.
 
உலக சுற்றுச்சூழல் தின விழா, சட்டக் கல்வியறிவு முகாம் போன்றவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்படத்தில் நேற்று நடைபெற்றன. 

இந்த விழாவுக்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைய செயற்குழுத் தலைவருமான ஹுலூவாடி ஜி. ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாவட்ட சுற்றுலாத்துறை விருந்தினர் மாளிகையில் நீதிபதி ஹுலூவாடி ஜி. ரமேஷ் மரக்கன்றுகளை நட்டார். இதையடுத்து, முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

அதன்பின்னர் அவர், "நாட்டில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேவைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வீட்டு மரச் சாமான்கள், காகிதங்கள் உள்ளிட்ட தேவைகளால் மரங்கள் அதிகளவில் அழிக்கப்படுகின்றன. 

காகிதத் தட்டுப்பாடு காரணமாக மாற்றுப் பொருளாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் இன்று அனைவரும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. அதைப் பயன்படுத்தினாலும், அதன் பாதிப்பு மோசமானது. அதனை நாம் முறையாக மறுசுழற்சியும் செய்வதில்லை. 

ஆங்காங்கே வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ண நேரிடுகிறது. இதனால், கால்நடைகள் தரும் பாலிலும் விஷம் சேர்கிறது. இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
அதேபோல ஒலி, ஒளி மாசு என சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையில் மாசுகள் ஏற்படுகின்றன. நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்காமல் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். 

நமது தவறுகளால் இயற்கையிடம் இருந்து பல இடையூறுகளை சந்தித்து வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகம் உள்ளது. 

அதேபோல, கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் மாற்று வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். தன்னில், வீட்டுக்குள், ஊருக்குள் என்ற ரீதியில் மாற்றம் வர வேண்டும். எனவே, ஊராட்சிகளில் சுமார் 2 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் சமூகக் காடுகளை ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டம் கொண்டுவர வேண்டும். 

சமூகக் காடுகள் குறித்து கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம், அதிக பிராண வாயுவை உற்பத்தி செய்து, ஆரோக்கியம் காக்க வேண்டும்.
 
பாட்டில்களில் தூய்மையான காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு செல்லக் கூடாது. பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மரக் கன்றுகளை நட்டு, அவற்றை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்றுத்தர வேண்டும். 

தொன்மை வாய்ந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. இது மாசற்ற, தூய்மையான நகரமாக மாறுவதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும். 

ஆங்கில மருந்துகள் தற்காலிகமானவை. ஆயுர்வேத மூலிகைச் செடிகள் மூலம் நிரந்தரமாக நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே, இயற்கையோடு இணைந்த விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம். மரங்களை வளர்ப்பது மிகவும் அவசியம்.
 
மரங்கள் பிராண வாயுயை உருவாக்கும். பிராண வாயு மனிதர்களை நல்ல உடல்நலத்தோடு இருக்கச் செய்யும். அதன்மூலம், நல்ல உடல் நலம் மிக்க மனிதர்களைக் கொண்ட இந்தியாவை உருவாக்க முடியும். சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்" என்று பேசினார்.
 
இந்த விழாவில், மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா, மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வன அலுவலர் சச்சின் போசலே, லோக் அதாலத் தலைவர் ஜி.ராஜா, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.