people held in road block for drinking water Traffic damage
வேலூர்
வேலூரில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 50-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் 32-வது வார்டில் வெங்கடேஸ்வரா நகர், தில்லை நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து குழாய் மூலம் இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றபோது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து விட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நகராட்சி அலுவலகம், உதவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு தே.மு.தி.க. நகர செயலாளர் சேட்டு தலைமையில் வெங்கடேஸ்வரா நகரில் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் நேற்று காலை 8-30 மணிக்கு நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்தவுடன் திருப்பத்தூர் காவலாளார்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், "தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு நகராட்சி அலுவலர்கள், "இவர்களது கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
